பாலைவன பகுதிகளில் தோற்றம் பெறுகின்ற நிலவுருவங்களில் தின்னல் செயற்பாட்டுக்கு உட்பட்டவை காலப்போக்கில் அவை கொண்டுவந்து படியவிடப்படுகின்ற தன்மை, வடிவம் என்பனவற்றை ஆதாரமாக கொண்டு பல்வேறுபட்ட நிலவுருவங்கள் தோற்றம் பெறுகின்றன. அவற்றினை அவதானிக்கின்றபோது பிறையுருவ மணல்குன்று, தொடர்மணல்குன்று, நெடுமணல் குன்று, நுண் மணற்குன்று ஆகியன காணப்படுகின்றன.
பிறையுருவ மணற்குன்று பற்றி அவதானிக்கின்றபோது காற்றினால் அரித்துக்கொண்டுவரப்படுகின்ற சிறுபரல்கள், மணல், பாறைத்துண்டுகள் போன்றன பாலைவனம் சார் பிரதேசங்களிலும் பிறைவடிவம் போன்ற அமைப்பிலும் படியவிடப்படும் வேளை அதனை பிறையுருவ மணற்குன்று என அழைப்பார்கள். இந்த மணற்குன்றுகள் துருக்கியின் பார்க்கன் என்னும் இடத்தில் அதிகம் அவதானிக்கக்கூடியதாக உள்ளதனால் இதனை பார்க்கன் மணற்குன்று எனவும் அழைத்துக்கொள்ளுவார்கள்.
இவ்வாறு மணற்குன்றுகள் உருவாகின்றபோது அவை காற்று வீசும் திசைக்கு ஏற்ப அதாவது காற்றுப்பக்கம் மென்சாய்வாகவும், காற்று ஒதுக்குப்பக்கம் குத்து சாய்வாகவும் காணப்படுவதுடன் காற்றின் தன்மைக்கு ஏற்ப ஒன்றோடு ஒன்று இணைந்து செறிவாகவும், சில சந்தர்ப்பங்களில் ஐதான போக்கிலும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப அசையும் தன்மை கொண்டு காணப்படுவதால் இதனை அசையும் பிறையுருவ மணற்குன்று என்றும் அழைத்துக்கொள்ளுவார்கள்.
வறண்ட வலய பகுதிகளில் காற்றினால் எடுத்துகொண்டுவரப்படுகின்ற மணல்கள், சிறுபரல்கள் போன்றன கொண்டு செல்லப்படும் வேளையில் அதன் போக்குக்கு குறுக்கே பாறைப்படைத்தளங்கள் எதிர்ப்படும்வேளையில் அந்த பாறைப்படைத்தளங்களுக்கு முற்பகுதியில் மணற்படிவுகள் தொடர்ச்சியாக படியவிடப்படும் வேளை அதனை முன்னோக்கிய மணற்குன்றுகள் என அழைப்பார்கள்.
மீண்டும் தொடர்ச்சியாக எடுத்துகொண்டுவரப்படுகின்ற பருப்பொருட்கள் அந்த முன்னோக்கிய மணற்குன்றுக்கு முற்பகுதியில் ஒரு சுழற்சியினை ஏற்படுத்தி தொடர் மணற்குன்றின் பிற்பகுதியில் படியவிடப்படுகின்றபோது அதனையே பின்னோக்கிய மணற்குன்று அல்லது புச்ச மணற்குன்று என அழைப்பார்கள். அவ்வாறு கொண்டுவரப்பட்ட படிவுகளில் தொடர் மணற்குன்றின் அற்பகுதிகளில் படியவிடப்படும் போது அதனை பக்கமணற்குன்று என அழைப்பார்கள்.
காற்றினால் அரித்துக்கொண்டு வரப்படுகின்ற மணல்களி, பாறைத்துண்டுகள் போன்றன நீளமான போக்கில் கொண்டுவந்து படியவிடப்படும்போது அதனை நெடுமணற்குன்று என அழைப்பார்கள். இதனை சகாரா , கலகாரி, அரேபியா உள்ளிட்ட பாலைவனங்களில் அதிகம் அவதானிக்கலாம்.


No comments:
Post a Comment