தேசப்படமானது பல்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக குடியேற்றங்களை அமைத்தல், உல்லாச பயண விருத்திகள், கல்வி சார் செயற்பாடுகள், பிரதேச அபிவிருத்தி, நீர்ப்பாசனம், போக்குவரத்து நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக இந்த தேசப்படத்தில் நிறங்களும் குறியீடுகளும் பிரதானமாக காணப்படுகின்றன.
குறியீடுகளையும் நிறங்களையும் பயன்படுத்தி தான் படங்களை வரைய முடியும். குறியீடுகள் பொதுவாக பௌதீக மற்றும் பண்பாட்டு அம்சங்களுக்கு பயன்படும். பௌதீக அம்சங்களை பொறுத்தவரை சமஉயர கோடுகள், இடைச்சம உயரகோடுகள், சம ஆழ கோடுகள், போன்றவற்றினை வரைவதற்கு பயன்படுகின்றது. சம உயர கோடுகளினை வரையும் போது கபிலநிறம் அல்லது மண்ணிறத்தில் வரைய வேண்டும். இடை சம உயரக்கோடுகளினை ---- என்ற குறியீட்டினை பயன்படுத்தி வரைந்து கொள்ள முடியும். சம ஆழ கோடுகள் நீல நிறத்தினால் வரையப்படும்.
இதுதவிர கடல் மற்றும் நதிகளினை அடையாளப்படுத்தும் போது நீல நிறுத்தினால் காட்டி கொள்ளலாம். மற்றும் கடற்கரை நீங்கு மணல்தடை மண்ணிறத்தினால் குறித்து காட்டப்படும். மலைத்தொடர்கள், கூம்புக்குன்றுகள், சுவடுகள், பள்ளத்தாக்குகள், கணவாய்கள் போன்றவற்றினை சம உயரகோடுகள் போல் வரைய வேண்டும். இதற்கும் கபில நிறம் அல்லது மண்ணிறத்தினை பயன்படுத்த வேண்டும்.
பண்பாட்டு அம்சங்களை அவதானிக்கின்ற போது பௌதீக அம்சங்களுக்கும் பண்பாட்டு அம்சங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. பண்பாட்டு அம்சங்களாக அதிவேக பெருந்தெருக்கள், நீர்ப்பாசன கால்வாய்கள், பிரதான வீதிகள், புகையிரத வீதிகள், புகையிரத நிலையங்கள், எல்லைகள் , பாடசாலைகள், கோவில்கள், நீதிமன்றம், பொலிஸ் நிலையம், கட்டிடங்கள், குடியிருப்புக்கள், விவசாய நிலங்கள், பிற கட்டிடங்கள் போன்றன காணப்படுகின்றன.


No comments:
Post a Comment