இந்துசமுத்திரப்பரப்பிலே இந்திய துணைக்கண்டத்துக்கு அருகில் ஆசியாவின் ஆச்சரியம் மிக்க ஒரு அழகிய தீவாக இலங்கை காணப்படுகின்றது. இந்த இலங்கையையும் இந்தியாவினையும் பிரிக்கின்ற நீரினையாக பாக்குநீரினை காணப்படுகின்றது. பாக்குநீரினையின் நீளம் 32கிலோமீட்டர்கள் ஆகும். இலங்கையினை அமைவிட ரீதியாக அவதானிக்கும்போது வட அகலாங்கு 5-10 பாகை வரைக்கும் கிழக்கு நெட்டாங்கு 79-81 பாகைக்கும் இடையில் காணப்படுகின்றது. அத்துடன் இலங்கையின் நீளம் வடக்கே பருத்தித்துறை முனையில் இருந்து தெற்கே தெவிநுவர வரை 432 கிலோமீட்டர்கள் ஆகவும், அகலம் கிழக்கே சங்கமன்கந்தமுனை தொடக்கம் மேற்கே கொழும்பு வரை 224 கிலோமீட்டர்கள் ஆகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் பரப்பளவினை அவதானிக்கும்போது 65610 சதுரகிலோமீட்டர்களாக காணப்படுகின்றது. இதன் ஆகக்கூடிய கரையோரநீளம் 1340 கிலோமீட்டர்கள் ஆகவும், அதிகூடிய உயரம் 2524.13 மீட்டர் ஆகவும் காணப்படுகின்றது. இவ்வாறான உயரம் கூடிய பகுதியாக பேதுருதலாகால மலை காணப்படுகின்றது. இலங்கையினை ஆரம்பகாலம் தொட்டு பல்வேறு நாட்டவர்களாலும் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்பட்டது. குறிப்பாக இலங்காபுரி, நாகதீப, லங்காதூப, செரண்டிப், சிலோன், தம்பபன்னி, மணிபல்லவம் ஆகிய பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டது.
இலங்கையின் தரைத்தோற்ற அம்சங்களினை அவதானிக்கும்போது கரையோரசமவெளி 0-30 மீட்டர்கள் ஆகவும், அக சமவெளி( அண் சமவெளி, ஆறறித்த சமவெளி) 30-300 மீட்டர்கள் ஆகவும், மத்தியமலை நாடு 300மீட்டர்களுக்கு அப்பாலும் காணப்படுகின்றது. இலங்கையின் காலநிலை பரம்பலில் வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி செல்வாக்கு செலுத்துகின்றது. சராசரி வெப்பநிலை 28 பாகை செல்ஸியஸ் ஆகவும் இதில் குறைந்த வெப்பநிலை 17 பாகை செல்ஸியஸ் ஆகவும், அதிகூடிய வெப்பநிலை 33 பாகை செல்ஸியஸ் ஆகவும் காணப்படுகின்றது. மழைவீழ்ச்சியினை எடுத்துக்கொண்டால் வடகீழ் பருவகாற்றுமழை, தென்மேல் பருவக்காற்று மழை , சூறாவளி மழை போன்றன கிடைக்கின்றன. இலங்கையின் சராசரி மழைவீழ்ச்சியினை அவதானிக்கும்போது ஈரவலயத்தில் 2000 மில்லிமீட்டர் ஆகவும், உலர்வலயத்தில் 1250-2000 மில்லிமீட்டர் ஆகவும், அரைகுறை வறள் வலயத்தில் 1250 மில்லிமீட்டர்க்கு குறைவாகவும் காணப்படுகின்றது.
இலங்கையின் முக்கிய உணவு பயிர்களாக நெல், குரக்கன்,சோளம், பயறு, கௌபி,சோயா, துவரம்பருப்பு, அவரை, கடலை, போன்ற தானியப்பயிர்களும், உருளைக்கிழங்கு, மரவள்ளி, வற்றாளை, சிகைக்கிழங்கு, போன்றனவும், இதுதவிர நிலக்கடலை, கடுகு, மரக்கறிவகை, எள்ளு, முந்திரி, வெங்காயம், கறிமிளகாய் போன்றனவும் பயிரிடப்படுகின்றது. இலங்கையின் முக்கிய பெருந்தோட்ட பயிர்களாக தேயிலை, இறப்பர், தெங்கு போன்றன காணப்படுகின்றன. அத்துடன் தேயிலை, இறப்பர், வாசனை திரவியங்கள், தெங்கு, பூக்கள், வெற்றிலை, புகையிலை ஆகியனவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கனியவளங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை கொண்டுள்ளவை ஆகும். அதுபோல இலங்கையின் பொருளாதாரத்தினை தீர்மானிக்கும் காரணியாகவும் இவை காணப்படுகின்றன. குறிப்பாக இல்மனைட் படிவுகள்,காரியம், பொஸ்பரசு, சிலிக்கா, கயோலின், மைக்கா, பெற்றோலியம்(மன்னார் வளைகுடா பகுதி) , இரத்தினக்கல், மாணிக்கக்கல், போன்றன முக்கிய கனியவளங்களாக காணப்படுகின்றன.


No comments:
Post a Comment